தமிழக சட்டசபையின் இன்றைய(16-04-2025) கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக எம்எல்ஏக்கள், 3 அமைச்சர்கள் மீது கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்கு எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு சபாநாயகர் அப்பாவு, தீர்மானம் நீங்கள் கொடுத்துள்ளீர்கள், அது பரிசீலனையில் உள்ளது. இன்றைக்கு மற்ற அலுவல்கள் இருப்பதால், அதை விவாதத்திற்கு எடுக்க முடியாது என தெரிவித்தார். சபாநாயகரின் பதிலை ஏற்க மறுத்து சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதிமுகவினர் வெளிநடப்பு செய்த நிலையில், அக்கட்சி எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம் மட்டும் அவையின் உள்ளே அமர்ந்து இருந்தார். அதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமைச்செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
அதிமுக சார்பில், பேரவையில் அமைச்சரவை மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தோம். தீர்மானத்திற்கு சபாநாயகர் அனுமதி தரமறுத்ததை கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது. பாஜகவுடன் கூட்டணியில் அங்கம் வகிப்போம் என்று கூறினோம். கூட்டணி ஆட்சி என்று கூறவில்லை. டெல்லிக்கு பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி என்றுதான் அமித்ஷா கூறினார். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா கூறவில்லை. நாங்கள் கூட்டணி வைத்தால் திமுகவுக்கு ஏன் எரிச்சல்? திமுகவுக்கு பயம். திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளோம் இந்த கூட்டணியில் வேறு சில கட்சிகளும் இணைய வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
Comments are closed.