Rock Fort Times
Online News

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்து கொடுத்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு குவியும் பாராட்டுக்கள்…!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு 14-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 6 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டன. இதனால், வெளியூர்களில் தங்கி வேலை பார்க்கும் அரசு ஊழியர்கள், வெளி மாவட்டங்களில் தங்கி படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று உறவினர்களோடு பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். இதனால், சென்னை, திருச்சி மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பேர் சொந்த ஊருக்கு படை எடுத்தனர். அவர்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சியில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்காதபடி திருச்சி மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் மட்டும்இன்றி சோனா- மீனா தியேட்டர், மன்னார்புரம் நான்கு ரோடு ஆகிய இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்பட்டன. பயணிகள் அங்கு செல்வதற்கு வசதியாக டவுன்பேருந்துகளும்  இயக்கப்பட்டன. போக்குவரத்து கழக அதிகாரிகளின் இந்த சிறப்பான ஏற்பாட்டால் பயணிகள் தங்களது இருப்பிடங்களுக்கு எவ்வித சிரமமும் இன்றி பயணிக்க முடிந்தது. குறிப்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனர் பொன்முடி, திருச்சிராப்பள்ளி மண்டல பொது மேலாளர்கள் முத்துகிருஷ்ணன், சிங்காரவேலன், துணை மேலாளர்கள் சுரேஷ்குமார், ரவி, சாமிநாதன் ஆகியோர் ஒரு வாரத்திற்கும் மேலாக இரவு- பகல் பாராது சிறப்பாக செய்திருந்தனர். குடிநீர் வசதி, கழிவறை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. இதனால் சிறு குறையும் இன்றி பயணிகள் தங்களது இடங்களுக்கு சென்றனர்.

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் லிட், சார்பாக திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பொங்கல் விடுமுறையை முன்னிட்டு 10.01.2025 முதல் 19.01.2025 வரை பொதுமக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கும். பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிவிட்டு மீண்டும் ஊர் திரும்புவதற்கும் போதிய அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இச்சிறப்பு பேருந்துகள் மூலம் பயணிகள் தடையின்றி சென்னை, திருப்பூர், கோயம்புத்தூர், புதுக்கோட்டை, மதுரை, தஞ்சாவூர் மார்க்கத்தில் செல்வதற்கு 24 மணி நேரமும் இணைப்பு பேருந்து வசதியும் செய்து கொடுக்கப்பட்டது. மேற்கண்டுள்ள இயக்கப்பகுதிகளில் இரவு மற்றும் பகல் 24 மணி நேரமும் பேருந்து நிலையங்களில் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பயணிகளின் வருகைக்கேற்ப கூடுதல் பேருந்து வசதி ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. 10.01.2025 முதல் 13.01.2025 வரை பொங்கல் பண்டிகைக்கு முன்பு 1758 சிறப்பு பேருந்து கள் ஏற்பாடு செய்யப்பட்டது. 14.01.2025 முதல் 19.01.2025 வரை பொங்கல் பண்டிகை முடிந்து அவரவர் இருப்பிடத்திற்கு திரும்ப செல்வதற்கு வசதியாக 1978 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. இப்பேருந்துகளில் பயணிகள் எவ்வித சிரமமின்றி பயணம் செய்தனர். மேலும் பொங்கல் விடுமுறையின் கடைசி நாளான 19.01.2025 அன்று ஞாயிற்றுக்கிழமை பகல் மற்றும் நள்ளிரவு 12.30 மணி வரை சென்னை மற்றும் மேற்கண்ட ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு 220-க்கும் அதிகமான சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டது.

சென்னைக்கு கூட்டம் அதிகமாக இருந்த நேரத்தில் தனியாக பயணம் செய்யும் மகளிர் பயணிகளின் நலன்கருதி மகளிர் மட்டும் பயணம் செய்யும் வகையில் சிறப்பு பேருந்துகளும் இயக்கம் செய்யப்பட்டது. குறிப்பாக, திருப்பூருக்கு 299 சிறப்பு பேருந்துகளும், கோயம்புத்தூருக்கு 343 சிறப்பு பேருந்துகளும், 19.01.2025 அன்று காலை முதல் அதிகாலை 1.30 மணிக்குள்ளாக திருப்பூருக்கு 124 சிறப்பு பேருந்துகளும், கோயம்புத்தூருக்கு 133 சிறப்பு பேருந்துகளும் இயக்கம் செய்யப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர். கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக இரவு-பகல் பாராமல் பயணிகளின் நலன் கருதி சிறு குறையும் இன்றி சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்து கொடுத்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு பயணிகள் தங்களது பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்