பேஸ்புக்கில் பெண்கள் குறித்து அவதூறு – மதுரை மாவட்ட இளைஞரை கைதுசெய்தது திருச்சி சைபர் கிரைம் போலீஸ்!
கடந்த ஜூலை 2 ஆம் தேதி பேஸ்புக் பக்கத்தில் ஒருவர் இருவேறு மதங்களைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் முத்தமிடுவது உள்ளிட்ட சர்ச்சைக்குரிய படங்களை பதிவேற்றியதாக திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீஸாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீஸார் குறிப்பிட்ட பேஸ்புக் பக்கங்களை ஆய்வு செய்தனர்.அந்த நபர் இதுபோல பெண்களை கொச்சைப்படுத்துவது போன்ற படங்களை தொடர்ந்து பதிவேற்றியிருந்தது தெரியவந்தது. எனவே, சைபர்கிரைம் காவலர் ராஜசேகர் அளித்த புகாரின்பேரில், நடவடிக்கை எடுக்க திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வீ. வருண்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிந்து,பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்த மதுரை மாவட்டம், அப்பன்திருப்பதி, பெருமாள் கோயில் தெருவைச்சேர்ந்த அசோக்குமார் (27) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் எச்சரித்துள்ளார்.
Comments are closed.