கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரைச் சேர்ந்த வக்கீல் கண்ணன் என்பவருக்கும், பயிற்சி வக்கீலான ஆனந்தகுமார் என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஓசூர் நீதிமன்றத்துக்கு கண்ணன் வந்த போது, அங்கு அரிவாளுடன் வெளியே வந்த ஆனந்தகுமார், கண்ணனை சரமாரியாக வெட்டினார். இதில், வக்கீல் கண்ணனுக்கு கழுத்து, தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டதால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தைக் கண்டித்து, ஓசூர் கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஓசூர் கோர்ட்டு நீதிபதி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர். இதனிடையே, கொலைவெறி தாக்குதல் நடத்திய ஆனந்தகுமார் கோர்ட்டில் சரணடைந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வெட்டுப்பட்ட வக்கீல் கண்ணனுக்கும், ஆனந்தகுமாரின் மனைவியான வக்கீல் சத்யாவுக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. தொடர்ந்து கண்ணன் தகராறு செய்ததால் ஆனந்தகுமார் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டியது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் வக்கீலை வெட்டிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆனந்தகுமார், சத்யா தம்பதி சிறையில் அடைக்கப்பட்டனர்.
Comments are closed.