Rock Fort Times
Online News

நகைக்கடை அதிபர் தற்கொலை: திருச்சி பெண் சப்- இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்…

மாநகர போலீஸ் கமிஷனர் நடவடிக்கை...

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் ராஜசேகரன்( வயது 58), இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நகர செயலாளர். இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். ராஜசேகரன் கடந்த 25 ஆண்டுகளாக பட்டுக்கோட்டை பகுதியில் நகை கடை நடத்தி வந்தார். பொதுமக்களின் பல்வேறு பிரச்சனைகளை முன்னெடுத்து சென்று மக்களின் நன் மதிப்பை பெற்றவர். இந்த நிலையில் திருட்டு நகைகளை வாங்கியதாக திருச்சி கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீசார் ராஜசேகரன் மற்றும் அவரது மனைவியை திருச்சிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது பெண் சப்- இன்ஸ்பெக்டர் அவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர், கட்சி பிரமுகர்கள் அவர்களை வெளியே அழைத்து வந்த நிலையில் நேற்று முன்தினம் ( 25.06.2023 ) செட்டிய காடு என்ற இடத்தில் வேளாங்கண்ணியில் இருந்து எர்ணாகுளம் நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்து ராஜசேகரன் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தை கண்டித்தும், ராஜசேகரனிடம் கடுமையாக நடந்து கொண்ட பெண் சப்- இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அவரது உறவினர்கள் மற்றும் நகைக்கடை உரிமையாளர்கள் பட்டுக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் எம். சத்தியபிரியா ஐபிஎஸ், கே.கே.நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உமாசங்கரியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்தநிலையில் பெண் சப்- இன்ஸ்பெக்டர் உமாசங்கரியை ஆயுதப்படைக்கு மாற்றி போலீஸ் கமிஷனர் எம். சத்திய பிரியா ஐபிஎஸ் உத்தரவிட்டார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்