Rock Fort Times
Online News

திரையரங்குகளை அதிரவைத்த ‘ஜனநாயகன்’… விஜயின் வருகையில் நெகிழ்ந்து அழுத அமைச்சர்!

தமிழக முதல்வர் விஜய் – எச். வினோத் கூட்டணியில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று (ஜூலை 23) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது .தமிழகம் முழுவதும் சுமார் 950 திரையரங்குகளில் 4,500-க்கும் மேற்பட்ட காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன. திரைப்படம் வெளியானதையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு திரையரங்குகள் முன் ரசிகர்கள் அதிகாலையிலிருந்தே திரண்டு, டிஜே இசைக்கு உற்சாகமாக நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இணையத்தில் படம் வெளியானாலும், “திருட்டுப் பிரதியை பார்க்காமல், திரையரங்கில் மட்டுமே படத்தைப் பார்ப்போம்” என்ற உறுதியுடன் ரசிகர்கள் காத்திருந்து, முதல் நாளிலேயே திரைப்படத்தைக் காண வந்தனர்.

மேலும், திரைப்படத்தின் தொடக்கத்தில் “தளபதி விஜய்” என்பதற்குப் பதிலாக “மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய்” என்ற டைட்டில் இடம்பெறும் தருணத்தைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர். இந்த நிலையில், புதுக்கோட்டை மாநகரில் மூன்று திரையரங்குகளில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையிடப்பட்டது. அங்கு விஜயின் தீவிர ரசிகரும், தமிழக அமைச்சரவையில் அமைச்சராகவும் உள்ள முகமது பர்வேஸ் திரைப்படத்தைக் காண வந்தார். திரையரங்கில் படம் தொடங்கி, திரையில் முதல்வர் விஜய் தோன்றியவுடன், உணர்ச்சிவசப்பட்ட அமைச்சர் முகமது பர்வேஸ் கண்கலங்கி படத்தைக் கண்டு ரசித்தார். இந்த நெகிழ்ச்சியான தருணம் அருகில் இருந்த ரசிகர்களையும் உணர்ச்சிவசப்பட வைத்தது. முதல்வர் விஜயின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் தமிழகம் முழுவதும் ரசிகர்களின் உற்சாகமான கொண்டாட்டத்துடன் வெளியாகியுள்ள நிலையில், பல்வேறு திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பு பெற்று வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்