நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அவரது 172வது படம் ‘ஜெயிலர் 2’. இந்தப் படம் இன்று( அக்.15) தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல்வேறு மொழிகளிலும், உலக அளவிலும் ரிலீஸ் ஆகி உள்ளது. ரம்யா கிருஷ்ணன், எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன், மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். ஜெயிலர்- 2 திரைப்படம் இன்று ரிலீஸ் ஆனதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில்
காலை முதலே குவியத் தொடங்கினர். பின்னர் அவர்கள் ஆட்டம் பாட்டம் மற்றும் பட்டாசு வெடித்து ரஜினி கட்- அவுட்டுக்கு மாலை அணிவித்து மகிழ்ந்தனர். அதனைத் தொடர்ந்து தியேட்டருக்கு சென்று படம் பார்த்தனர். திருச்சியில் ஜெயிலர்- 2 படம் ரிலீஸ் ஆன தியேட்டர்கள் முன்பு திரண்ட ரஜினி ரசிகர்கள் ஆடி பாடி கொண்டாடினர். பொதுவாக ஒரு படம் முதல் பாகத்தில் நன்றாகவும், இரண்டாம் பாகத்தில் சுமாராகவும் இருக்கும். ஆனால், ஜெயிலர் இரண்டாம் பாகமும் நன்றாக வந்திருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர். இந்தப் படம் வசூல் ரீதியில் மாபெரும் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சௌந்தர்யா ரஜினிகாந்த் பதிவு ;
இந்தப் படம் குறித்து ரஜினிகாந்தின் மகளும், இயக்குநருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைதள பதிவில், “தலைவர் என்பது ஒரு உணர்வு (Emotion]. அது எனக்கு மட்டுமல்ல, அவரை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் தான். அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது; உணர மட்டுமே முடியும். ‘ஜெயிலர் 2’ ஒரு பிரம்மாண்டமான பிளாக்பஸ்டர் திரைப்படம். எனது அப்பா திரையில் மீண்டும் ஒருமுறை மாஸ் காட்டியுள்ளார். 51 ஆண்டுகளாக எங்களை மகிழ்வித்து வரும் அவரது பயணம், 51 ஆண்டுகால ‘ரஜினிசம்’!” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் நெல்சன் திலீப்குமார் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Comments are closed.