அடிக்கடி விபத்து நேரிடும் திருச்சி, குடமுருட்டி முதல் பெட்டை வாய்த்தலை வரை உள்ள சாலையை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு…!
திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில், குடமுருட்டி முதல் அந்தநல்லூர் வரை 12 கி.மீ தொலைவிலான பகுதி மாநில நெடுஞ்சாலையாகவும், அதன்பின்னர் உள்ள பகுதி தேசிய நெடுஞ்சாலையாகவும் உள்ளது. இதில் மாநில நெடுஞ்சாலைக்கு உட்பட்ட பகுதியில் அடிக்கடி நேரிடும் விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படுவதால், இச்சாலையை சீரமைத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி, விமானப் படையின் ஓய்வுபெற்ற அதிகாரி கே.தங்கராஜ், சாலைப் பயனீட்டாளர் நலக்குழு ஒருங்கிணைப்பாளர் அய்யாரப்பன் உள்ளிட்ட சமூக செயல்பாட்டா ளர்கள் திருச்சி எம்.பி.துரை வைகோவிடம் கோரிக்கை மனு அளித்தனர். அவர் அந்த மனுவை ஆட்சியருக்கு அனுப்பி, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். இதையடுத்து ஆட்சியர், அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து, 3 நாட்களில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருந்தார். ஆட்சியரின் உத்தரவின்படி, ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் தமிழ் மணி, ஜீயபுரம் டிஎஸ்பி சங்கர், மாநில நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் பிரியதர்ஷினி உள்ளிட்ட குழுவினர் குடமுருட்டி முதல் பெட்டை வாய்த்தலை வரை கரூர் நெடுஞ்சாலையில் விரிவான ஆய்வு மேற்கொண்டனர். இந்த குழுவினர், இந்த சாலையில் பாதுகாப்பான பயணத்துக்கு ஏதுவாகவும், விபத்துகளை குறைக்கும் விதமாகவும் பல்வேறு பரிந்துரைகள், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தயாரித்து ஆட்சியரிடம் அளிக்க உள்ளனர். இந்த அறிக்கையின் பரிந்துரைகளை பரிசீலித்து, கரூர் சாலையில் நிகழும் விபத்துகளை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் எடுப்பார் என சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Comments are closed.