திருச்சி, ஸ்ரீரங்கம் மேலூர் கணபதி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மனைவி உமா மகேஸ்வரி (வயது 70). இவர் மங்கம்மா நகர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அடையாளம் தெரியாத இரண்டு டிப்டாப் ஆசாமிகள், அவரிடம் தாங்கள் போலீஸ்காரர்கள் என அறிமுகம் செய்து கொண்டனர். பின்னர் கொள்ளையர்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நிலையில் இவ்வாறு வெளிப்படையாக நகை அணிந்து கொண்டு செல்கிறீர்களே? என கேள்வி எழுப்பினர். பின்னர் நகையை கழற்றி பார்சில் வையுங்கள் என கூறினர். இதை அடுத்து உமா மகேஸ்வரி தான் அணிந்திருந்த 4 பவுன் செயின் மற்றும் வளையலை கழற்றி அந்த மர்ம நபர்களிடம் கொடுத்தார். உடனே அந்த மர்ம நபர்கள் நகைகளுக்கு பதில் சிறு கற்களை பொட்டலமாக மடித்து அவரிடம் கொடுத்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். பின்னர் வீட்டிற்கு சென்று பேப்பரை அவிழ்த்து பார்த்த போது, அதில் கற்கள் இருப்பது கண்டு அதிர்ச்சியில் அவர் உறைந்தார். பின்னர் இது குறித்து உமாமகேஸ்வரி ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.