ஸ்ரீரங்கத்தில், காவிரி ஆற்றை வேடிக்கை பார்க்க சென்றபோது மர்ம கும்பலால் தாக்கப்பட்ட கல்லூரி மாணவர் உயிரிழப்பு- 4 பேர் கைது…!
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையை சேர்ந்தவர் ரஞ்சித் கண்ணன்(18). இவர், திருச்சியில் உள்ள தந்தை பெரியார் அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று கல்லூரி முடிந்து ஸ்ரீரங்கம் மாம்பழ சாலையில் உள்ள அவருடைய மாமா வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், மாமா மகன் சந்தோஷ்(20) என்பவருடன் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை வேடிக்கை பார்ப்பதற்காக கீதாபுரம் பகுதிக்கு சென்றுள்ளார். ரஞ்சித் மற்றும் சந்தோஷ் கண்ணன் ஆகிய இருவரும் தண்ணீரைப் பார்த்து வியந்தபடியே கீதாபுரம் பகுதியில் காவிரி கரையோரம் நடந்து சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது அந்தப் பகுதியில் 5 பேர் கொண்ட கும்பல் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். ரஞ்சித் கண்ணன், சந்தோஷ் இருவரையும் பார்த்த அவர்கள் நீங்கள் யார்?, எதற்காக இங்கு வந்துள்ளீர்கள்? என கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாய் தகராறில் மர்ம நபர்கள் 5 பேரும் சேர்ந்து ரஞ்சித் கண்ணனை தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த ரஞ்சித் கண்ணன், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ரஞ்சித் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து ரஞ்சித் கண்ணனை தாக்கிய ஸ்ரீரங்கத்தை சேர்ந்த நவீன் என்கிற நவீன் குமார் (23), விஜய் (23) மற்றும் 17 வயதான 2 பள்ளி மாணவர்கள் என 4 பேரை கைது செய்தனர். மேலும், சரித்திர பதிவேடு குற்றவாளியான சுரேஷ் என்கிற சுளிக்கி சுரேஷ் (26) என்பவரை தேடி வருகின்றனர். எதற்காக ரஞ்சித் கண்ணனை அவர்கள் 5 பேரும் தாக்கினார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments are closed.