Rock Fort Times
Online News

இந்தியாவில், 34 லட்சம் ஏக்கர் நிலங்கள் வக்பு வாரியத்திற்கு வந்தது எப்படி?- கேட்கிறார் மத்திய இணை அமைச்சர்…!

மத்திய தொழில்துறை வேலைவாய்ப்பு இணை அமைச்சர் ஷோபா கரந்தலோ திருச்சி மாவட்டம்,  திருச்செந்துறை  சந்திரசேகர மவுலீஸ்வரர் கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம்  செய்தார். பின்னர் அவர் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அதனைத்தொடர்ந்து நிலம் பாதுகாப்பு இயக்கம் மற்றும் அங்கு வாழும் மக்களிடமிருந்து கொடுக்கப்பட்ட மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த 1950ம் ஆண்டு அம்பேத்கர் கொண்டு வந்த அரசியலமைப்புச் சட்டத்தில் வக்பு வாரியம் இல்லை. ஆனால், 1954ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்த நேருவின் காலக்கட்டத்தில் தான், சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. அப்போது இந்தியாவில், 1000 ஏக்கர் நிலம் மட்டுமே வக்பு வாரியத்துக்கு இருந்தது. தற்போது, இந்தியாவின் மூன்றாவது அதிக நிலங்களை வக்பு வாரியம் கொண்டுள்ளது.  அதாவது இந்தியாவில், 34 லட்சம் ஏக்கர் நிலங்கள் வக்புக்கு சொந்தம் என்கின்றனர். முஸ்லிம்களுக்கு சொந்தமான இடங்கள் என்றால் அதில் எங்களுக்கு பிரச்சனை இல்லை.  ஆனால், இந்து கோயில்கள், மடங்கள், விவசாயிகள், பொதுமக்களின் நிலங்களை அவர்களுக்கு சொந்தம் என்றால் எப்படி ஏற்பது?. குறிப்பாக, திருச்சி திருச்செந்துறை சந்திரசேகர சாமி கோவில் உட்பட இடங்களை வக்புக்கு சொந்தம் என்கின்றனர். இந்த கோயில், 1,300 ஆண்டுகளுக்கு முன் ராஜராஜ சோழனின் தாத்தா பராந்தக சோழனால் கட்டப்பட்டது.

இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டு கொள்ளவில்லை. இந்து ஆலய வருமானம் தேவை. இந்து ஆலயங்கள் தேவையில்லை என்று நினைக்கிறார்கள்.  கோயிலுக்கு சொந்தமாக நகைகளை உருக்கி, 500 கிலோ தங்கக் கட்டியை விற்க முயன்றனர். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த பின்னர், 200 கிலோ விற்பதாக சொல்கின்றனர். தமிழகத்தில் பாரதமாதா சிலை வைக்க முடியவில்லை.  ராமேஸ்வரம் கபே வெடிகுண்டு சம்பவத்தில் தமிழர்கள் குற்றவாளிகள் என்று நான் சொல்லவில்லை. குற்றவாளிகள் பாகிஸ்தானில் இருந்து தமிழகம் வந்து பயிற்சி பெற்று, இங்கிருந்து பெங்களூர் வந்து குண்டு வைத்திருக்கிறார்கள் என்று தான் சொன்னேன். ஆனால், நான் தமிழர்களை பயங்கரவாதிகள் என்று கூறியதாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டதால், நான் மன்னிப்பு கேட்டேன். எல்லா மாநிலங்களிலும் தீவிரவாதம் இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் தீவிரவாத செயல்களை கண்டு கொள்ளவில்லை.  தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தீவிரவாத செயல்களை தடுப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பேட்டியின் போது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்