திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தலையில் முக்காடு போட்டும், கையில் மண்சட்டி ஏந்தியும் கொட்டும் மழையில் விவசாயிகள் நூதன போராட்டம்…!
நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று(26-11-2024) விவசாயிகள் தலையில் முக்காடு போட்டும், கையில் மண்சட்டி ஏந்தியும் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மழை கொட்டியது. இருந்தாலும் மழையை பொருட்படுத்தாமல் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து ஆற்றுப் பாசன விவசாய சங்க தலைவர் விஸ்வநாதன் கூறுகையில், தமிழக அரசானது நில ஒருங்கிணைப்பு சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும். மத்திய அரசு அறிவித்துள்ள திருத்தப்பட்ட புதிய மின் திட்டத்தின் வாயிலாக விவசாயிகள் பெற்று வந்த இலவச மின்சாரம் கிடைக்காமல் போகும். எனவே மத்திய அரசு இந்த திருத்தப்பட்ட மின்சார திட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் எந்தப் பணிகளும் பார்க்காமல் தினமும் 300 ரூபாய் கூலி பெறும் இந்தத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை ரத்து செய்தால் விவசாயத்திற்கு தேவையான கூலி ஆட்கள் கிடைப்பார்கள். இதனை முன்னிலைப்படுத்தி இந்த போராட்டம் நடைபெற்றதாக தெரிவித்தார்.

Comments are closed.