Rock Fort Times
Online News

ராக்போர்ட் டைம்ஸ் செய்தி எதிரொலி: சமயபுரத்தில் கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து போதைப்பொருள் விற்பனை செய்தவர் கைது..!

திருச்சி மாவட்டம் சமயபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டு தனியார் பல்கலைக்கழகங்களும், பல்வேறு பொறியியல் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. இங்கு 20 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களைக் குறிவைத்து, மிகப்பெரிய போதைப்பொருள் மாஃபியா கும்பல் ஒன்று இப்பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரைகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருவதாக அண்மையில் ராக்போர்ட் டைம்ஸ் இதழில் விரிவான செய்தி வெளியிட்டிருந்தோம். மேலும், இப்போதைப்பொருள் மாஃபியா கும்பலை ஒழிக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தோம். இந்நிலையில், சமயபுரம் பகுதியில் ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணிகளை போலீசார் தீவிரப்படுத்தினர். அதன் ஒரு பகுதியாக, சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த ஒருவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த சரவணன் என்பதும், கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த சமயபுரம் காவல் ஆய்வாளர் குணசேகரன் தலைமையிலான போலீசார், கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த கிலோ கணக்கிலான கஞ்சா பொட்டலங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள், ஒரு செல்போன், ரூ.12 ஆயிரம் ரொக்கம் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். மேலும், இப்பகுதியில் மாணவர்களுக்கு போதைப்பொருட்களை யார் யார் விநியோகம் செய்கின்றனர் என்பது குறித்தும் போலீசார் ரகசியமாகத் தகவல்களைச் சேகரித்து வருகின்றனர். தொடர்ந்து, போதைப்பொருள் மாஃபியா கும்பலுக்கு எதிரான நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்