பாலியல் குற்றங்களிலிருந்து பெண் குழந்தைகளை காக்க ‘இமைகள்’ திட்டம் …
டி.ஜி.பி.சைலேந்திரபாபு ஐபிஎஸ் தொடங்கி வைத்தாா்...
பாலியல் குற்றங்களிலிருந்து பெண் குழந்தைகளை காக்கும் வகையில் ‘இமைகள்’ என்னும் திட்டத்தை தமிழ்நாடு காவல்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பாலியல் குற்றங்களில் இருந்து பெண் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் காவல்துறை மற்ற அரசு துறைகளுடன் இணைந்து செயல்பட நிலையான இயக்கமுறை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து முறையாக வழக்கு பதிவு செய்வது, முனைப்புடன் புலன் விசாரணை செய்வது, 60 நாட்களில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்வது, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு மற்றும் மறுவாழ்வு ஏற்பாடு செய்வது, அவர்களின் சட்டப்படியான பாதுகாப்பை உறுதி செய்வது போன்றவை உறுதி செய்யப்படும். மேலும், மருத்துவர்கள் மூலம் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு விரைவான சிகிச்சை அளித்து மனநல ஆலோசனையும் வழங்கப்படும். இத்திட்டம் குறித்து பள்ளி கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல், தெரு நாடகங்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி.சைலேந்திர பாபு ஐபிஎஸ் தொடங்கி வைத்தார். அப்போது வடக்கு மண்டல ஐ.ஜி கண்ணன், வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.