நெல்லையில் விஜய்க்கு கூடிய கூட்டத்தை இதுவரை நான் பார்க்கவில்லை… * நயினார் நாகேந்திரன் ‘மழுப்பல்’ பதில் !
தமிழக சட்டமன்ற தேர்தல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், வேட்பாளர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் தச்சை என்.கணேசராஜாவுக்கு ஆதரவு தெரிவித்து, பாஜக மாநில தலைவரும், சாத்தூர் தொகுதி வேட்பாளருமான நயினார் நாகேந்திரன் இன்று (ஏப்.9) நெல்லை பேட்டையில் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நெல்லைக்கு விஜய் வந்த போது அவருக்கு பெரும் கூட்டம் கூடியதாக பேசுகிறார்கள். நான் அதை பார்க்கவில்லை. பார்த்தால்தான் கருத்து தெரிவிக்க முடியும். விஜய்க்கு வரும் கூட்டம் பற்றி எங்களுக்கு கவலையில்லை. ஏனெனில், எம்ஜிஆர் காலத்தில் இருந்தே நெல்லை தொகுதி அதிமுகவின் இரும்புக் கோட்டை. இந்த தேர்தலிலும் அதை நிரூபிக்கும். மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, தமிழகத்திற்கு ரூ.14 லட்சம் கோடி நிதி தந்துள்ளார். நாட்டின் முன்னேற்றத்திற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால், காங்கிரஸ் கூட்டணியிலிருந்த திமுகவினர் தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு திட்டங்களையும் கொண்டு வரவில்லை. இதை மேடை போட்டு விவாதிக்க கூட தயார். தமிழகத்தில் தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களும்தான் அசுர வேகத்தில் ‘டெவலப்’ ஆகி வருகின்றன. இதைத் தடுக்க துப்பில்லாத திமுக அரசு, மத்திய அரசு தரும் நிதி குறித்து மேடை பேச்சு மட்டுமே பேசுகிறது. பிரதமர் மோடி தமிழகத்திற்கு வழங்கிய நிதியால் உருவான சாலைகள் மற்றும் பாலங்கள் தான் இங்கு உண்மையான வளர்ச்சி” என்றார்.
காங்கிரஸ் குறித்து விஜய் பேசிய கருத்துக்கு, “தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி எங்கே இருக்கிறது என்பது யாருக்குமே தெரியாது. பேருக்காக கூட்டணியில் இருக்கின்றனர். ஒருவேளை காங்கிரஸ் விஜய்யுடன் இணைந்திருப்பதாக கூறினால், அதை அவரிடம் தான் கேட்க வேண்டும்” என்றார்.

Comments are closed.