திருச்சியில் விடுமுறை நாளில் படு ஜோராக மது விற்பனை – வீடியோ எடுத்து வெளியிட்ட செய்தியாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல்…!
மிலாது நபியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இருந்தாலும் பல இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை படுஜோராக நடைபெற்றது. அந்தவகையில் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிறுகாம்பூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை மூடப்பட்டு இருந்தாலும் அதன் அருகே உள்ள பாரின் எதிரே முள்காட்டு பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை படுஜோராக நடந்தது. இதனை தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் வீடியோ எடுத்து அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். திருச்சி மாவட்டம் திருப்பைஞ்சீலி அருகே பழையூர் ஊராட்சி பகுதியில் அவர்கள் வந்தபோது திடீரென 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அவர்களை சரமாரியாக தாக்கியதோடு அவர்களின் சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதோடு எங்களுக்கு அமைச்சர் இருக்கிறார், உங்கள உயிரோடு விட மாட்டோம் என மிரட்டி உள்ளனர். இதில் காயமடைந்த அவர்கள் இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர் .
Comments are closed.