பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதைப் போல, குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டமும் ரத்து செய்யப்பட்டதா? * உதயநிதி கேள்விக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதில்..!
தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக ஆட்சியில் விளையாட்டுத் துறையின் தரத்தை மேம்படுத்தும் வகையில் செம்மஞ்சேரியில் 128 ஏக்கர் பரப்பளவில் ரூ.261 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு நகரம்
(குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி) அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டது. பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதைப் போலவே, குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கும் திட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டம் ஏன் கைவிடப்பட்டது? என்பது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார். இதற்கு பதிலளித்த பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, சர்வதேச தரத்தில் ஒலிம்பிக் நகரத்தை உருவாக்கும் முயற்சியில் அரசு இருக்கிறது. குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) ஆய்வு செய்யப்பட்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. திட்டம் ரத்து செய்யப்படவில்லை.42 வகையான விளையாட்டுகளை சர்வதேச தரத்தில் நடத்தும் வகையில் புதிய DPR தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இந்த புதிய திட்டம் முதலமைச்சரின் ஆய்வில் இருப்பதாகவும், கூடிய விரைவில் தமிழக மக்களுக்கு நல்ல செய்தியை முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் கூறினார். இதையடுத்து பேசிய உதயநிதி ஸ்டாலின், சென்னைக்கு அருகே 128 ஏக்கர் நிலம் கிடைத்தது சாதாரண விஷயமல்ல. பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட பிறகே செம்மஞ்சேரி அருகே ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, 1994ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்குப் பிறகு சர்வதேச தரத்தில் புதிய விளையாட்டு அரங்கம் உருவாக்கப்படவில்லை என்றும், கூடிய விரைவில் பணிகளைத் தொடங்கி, ஐந்து ஆண்டுகளுக்குள் முழுமையாக முடித்து, முதலமைச்சரால் ஸ்போர்ட்ஸ் சிட்டி திறக்கப்படும் என தெரிவித்தார்.

Comments are closed.