இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி !- விண்ணப்பித்து பயனடைய திருச்சி கலெக்டர் அழைப்பு!
தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக நிறுவனமானது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குகிறது. அந்தவகையில் இன்ஜினியரிங் படித்த இளைஞர்களுக்கான இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் எம்.பி.பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது., ஐடி துறையில் நிபுணர்கள் ஆவதற்கான பயிற்சிகள் ” தாட்கோ ” மூலம் வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியானது கணினி பொறியியல் நிபுணத்துவம், புதுமை திறன்களை வழங்குதல், மின்னணு வடிவமைப்பு, உற்பத்தி துறை, தானியங்கி தொழில்துறை, இயந்திரவியல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படும்.அதி நவீன தொழில்நுட்ப ஸ்டார்ட் நிறுவனங்களில் நிபுணர்களாகவும் மற்றும் தொழில் முனைவோர்களாகவும் இளைஞர்களை உருவாக்குவதே இப்பயிற்சியின் நோக்கம். தாட்கோ மூலம் கடந்தாண்டு முகாமில் பயிற்சி பெற்ற 28 இளைஞர்கள் பல்வேறு தனியார் முன்னணி நிறுவனங்களில் உயர் பதவிகளில் உள்ளனர்.எனவே இம் முகாமில் பயிற்சி பெற விருப்பமுள்ள இளைஞர்கள் தாட்கோ இணையதளத்தில் பதியலாம். 18 வாரம் நடைபெற உள்ள இப்பயிற்சியை கோவை ,திருநெல்வேலி ,திருச்சி, சேலம், ஓசூர், மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் தங்கும் வசதியுடன் பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது. இப்ப பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் இளைஞர்கள் பல்வேறு முன்னணி நிறுவனங்களில் குறைந்தபட்சம் ரூ. 20,000 ஊதியத்தோடு பணியில் சேரவும் வாய்ப்பு இருக்கிறது. பயிற்சி கட்டணத்தை தாட்கோவே ஏற்கும் என்பதால் எந்த விதமான கூடுதல் கட்டணமும் செலுத்த தேவையில்லை. இது குறித்த கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால் திருச்சி ராஜா காலனி, கலெக்டர் ஆபீஸ் ரோட்டில் உள்ள மாவட்ட தாட்கோ அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431- 2463969 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் எம்.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

Comments are closed.