நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் இரு மாதங்களில் நடைபெற உள்ளதால் கட்சியினர் தங்களது தேர்தல் பணிகளை தொடங்கி விட்டனர். முதல் கட்டமாக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதிமுக, பாஜ கூட்டணி முறிந்த பிறகு யார் எந்த பக்கம் போகிறார்கள் என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
திமுக, கூட்டணி பேச்சுவார்த்தையை ஏற்கனவே தொடங்கி விட்டது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனி்சாமி தலைமையிலான அதிமுக,
பாமக, தேமுதிக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் சேருவதற்கு அதிக சீட், மாநிலங்களவை எம்பி, அதிக பணம் கேட்டு கட்சிகள் நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்து பேசினார். அவர்கள் வருகிற நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என பாமக தலைவர் அன்புமணி கூறியிருந்தார். கூட்டணி அமைத்து போட்டியிட பாமக முடிவெடுத்துள்ள நிலையில் இருவரும் சந்தித்து பேசியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பாமக போட்டியிட விரும்பும் தொகுதி எண்ணிக்கை குறித்து இருவரும் பேசியதாக தெரிகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.