Rock Fort Times
Online News

வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் சேம நல நிதிக்கான உறுப்பினர் தேர்தல்…

தமிழக வரலாற்றில் முதல் முறையாக வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் சங்கத்தின் தேர்தல் நடைபெறுகிறது.’தமிழ்நாடு வழக்கறிஞர் குமாஸ்தா நல நிதி கமிட்டி’ ( Tamilnadu Advocate Clerk Welfare fund committee ) என்ற ஒரு அமைப்பு இருக்கிறது. தமிழ்நாடு – புதுச்சேரி வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர்தான் இதற்கும் தலைவர். இந்த கமிட்டியில் 7 உறுப்பினர்களாக ஹோம் செகரட்டரி, பைனான்ஸ் செகரட்டரி, சட்டத்துறை செகரட்டரி உயர் நீதிமன்ற பதிவாளர் ஆகியோர் உள்ளனர். இவர்களை தவிர 3 குமாஸ்தாக்கள் கொண்டது இந்த சங்கம். இதுவரை இந்த 3 குமாஸ்தாக்களை வழக்கறிஞர் சங்கத்தின் பிரதிநிதிகள் தங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுத்து நியமன முறையில் நியமித்துக் கொண்டார்கள். வழக்கறிஞர்களிடம் பணிபுரியும் குமாஸ்தாக்களின் நலன்களை பேணுவது, அவர்கள் யாரேனும் இறந்து போனால் அவர்களது குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் நிதியை தந்து உதவுவது உள்ளிட்ட விஷயங்களை நிர்வகிக்க தான் இந்த கமிட்டி அமைக்கப்படுகிறது.

இந்த முறையும் இது நியமனப் பதவியாக நியமிக்கப்படும் என்று நடவடிக்கைகள் தொடங்கியபோது, பல்வேறு மாவட்டங்களில் உள்ள வழக்கறிஞர் குமாஸ்தா சங்கங்கள் இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘எங்களுக்கான நலன்களை மனதில் வைத்து செயல்படும் நபர்களை நாங்களே தேர்ந்தெடுக்க வழிவகை செய்ய வேண்டும். அதற்காக தேர்தல் நடத்த வேண்டும்’ என்று குரல் எழுப்ப, வழக்கறிஞர் சங்கமும் அதனை ஏற்றுக்கொண்டு தீர்மானம் போட்டது. அந்த தீர்மானத்தின்படி இன்று  ( 25.08.2023 )  நடந்தது. இந்த தேர்தல் மூலம் பல்வேறு மாவட்ட வழக்கறிஞர் குமாஸ்தா சங்கங்களில் உறுப்பினர்களாக இருக்கும் 3500 பேர் வாக்களித்து இந்த 3 பேரை தேர்ந்தெடுக்கப் போகிறார்கள். தமிழ்நாடு, புதுச்சேரியையும் சேர்த்து இறுதி நிலவரப்படி 18 குமாஸ்தாக்கள் இந்த இடங்களுக்கு போட்டி போடுகிறார்கள்.

தமிழ்நாடு வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் சேம நல நிதிக்கான உறுப்பினர் தேர்தல் திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத்தில் இன்று  நடைபெற்றது. இதில் திருச்சி வழக்கறிஞர் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர் ராஜேந்திரகுமார் மற்றும் திருச்சி வழக்கறிஞர் சங்க செயலாளர் கண்ணன், செயற்குழு வழக்கறிஞர்கள் சுதர்சன், சிவக்குமார், சந்தோஷ்குமார் ஆகியோர் பங்கு பெற்றனர். இந்த தேர்தலில் வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் அனைவரும் கலந்து கொண்டு வாக்களித்தனர்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்