Rock Fort Times
Online News

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் நாளை(ஏப்ரல் 21) மாலையுடன் நிறைவு…!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடைபெற்று வரும் அரசியல் கட்சிகளின் தீவிர பிரச்சாரம் நாளை (ஏப்.21) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் ஏப்.23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக தமிழகம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 295 கம்பெனி துணை ராணுவப் படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி, மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்,
விசிக தலைவர் திருமாவளவன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜய காந்த் உள்ளிட்டோர் பல்வேறு மாவட்டங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இது மட்டுமின்றி, தேசிய கட்சியான பாஜக சார்பில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பியூஷ் கோயல், ராஜ்நாத் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோரும் தமிழகத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். இவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்காளர்களை சந்தித்தும், ரோடு ஷோ மூலமாகவும் ஆதரவு கோரி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் நாளை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. அதனால், அரசியல் கட்சிகளின் தீவிர பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்