Rock Fort Times
Online News

பாம்பன் ரயில்வே பாலத்தை திறந்து வைக்க தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்?- அரசியலில் பரபரப்பு…!

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் கடலுக்கு நடுவே ரயில்வே பாலம் அமைக்கப்பட்டு ரயில் போக்குவரத்து நடைபெற்று வந்தது.
நூற்றாண்டுகளைக் கடந்த இந்த பாலம் பழுதடைந்ததால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு ரூ.550 கோடி செலவில் புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இதற்கான வெள்ளோட்ட பணிகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்தநிலையில் பாம்பனில் அமைக்கப்பட்டுள்ள புதிய பாலத்தை ஏப்ரல் 6ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகை தர உள்ளார். இது ஒருபுறம் இருக்க எதிரும், புதிருமாக இருந்த அதிமுகவும், பாரதிய ஜனதாவும் வருகிற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் அண்மையில் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அதிமுக எம்.பி. தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி ஆகியோரும் உடன் சென்றிருந்தனர். இதில் அதிமுக -பாஜக கூட்டணி குறித்துப் பேசப்பட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில் அதனை எடப்பாடி பழனிசாமி மறுத்திருந்தார். அதற்கு அடுத்த நாளே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டார். இரு அரசியல் களத்தை மேலும் சூடாக்கியது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனும் டெல்லிக்குச் சென்றது மேலும் பரபரப்பை கூட்டியது.

இந்நிலையில் ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடியைச் மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக எடப்பாடி தரப்பில் பிரதமர் மோடியிடம் நேரம் கேட்டதாகவும், இதற்கான அனுமதியைப் பிரதமர் அலுவலகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேச நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் பிரதமர் மோடியை ஒரே நாளில் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்துப் பேச உள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்