தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கனமழை பதிவான நிலையில் சேலத்தில் வரும் டிச. 24-ம் தேதி நடைபெறவிருந்த திமுக இளைஞரணி மாநில மாநாடு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழை காரணமாக, வரும் டிச. 24, 2023 அன்று சேலத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு ஒத்திவைக்கப்படுகிறது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த டிச. 17-ம் (ஞாயிற்றுக்கிழமை) தேதி இந்த மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் வெள்ளம் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக டிச. 24-ம் தேதிக்கு மாநாடு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் குமரி ஆகிய நான்கு தென்மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் திமுக இளைஞர் அணி மாநாடு மீண்டும் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று அதிகாலை வரை தொடர் மழை பெய்ததால் மழை வெள்ளம் ஏற்பட்டது. மீட்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.