திமுக இளைஞரணி தொடங்கப்பட்ட பிறகு முதல் மாநாடு கடந்த 2007 ஆம் ஆண்டு நெல்லையில் நடந்தது. இந்த நிலையில் இரண்டாவது இளைஞர் அணி மாநில மாநாடு சேலத்தில் இன்று(21-01-2024) தொடங்கி நடைபெற்று வருகிறது.
மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக திமுக கொடி ஏற்றப்பட்டது. கட்சிக் கொடியை தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழி கருணாநிதி ஏற்றி வைத்தார். மாநாட்டில் கட்சியின் தலைவரும், முதல் அமைச்சருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க.முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என் நேரு, கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன், அமைச்சர் ஐ. பெரியசாமி, இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு எம்பி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். லட்சக்கணக்கான திமுக தொண்டர்களும், இளைஞர் அணியை சேர்ந்தவர்களும் குவிந்துள்ளனர். சாரை, சாரையாக வந்த வண்ணமும் உள்ளனர். ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு கோரி இரு சக்கர வாகனத்தில் தமிழகம் முழுவதும் பேரணியாக சென்றிருந்த திமுகவினர் 1500 பேர் மாநாட்டு திடலை வந்தடைந்தனர். இதனிடையே முரசொலி புத்தக விற்பனை நிலையம் மற்றும் இளைஞர் அணி புகைப்பட கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மாநாட்டுக்கு வந்திருந்த திமுகவினர் மற்றும் பொதுமக்களுக்கு திமுக வரலாற்றை விளக்கும் வகையில், மாநாட்டு திடலில் ஆயிரம் ட்ரோன்க ளைக் கொண்டு பிரம்மாண்ட ட்ரோன் ஷோ நடத்தப்பட்டது. பெரியார், அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரது செயல்பாடுகள், திட்டங்கள் குறித்தும், ஸ்டாலின், உதயநிதி மற்றும் கட்சியினரை வரவேற்கும் வகையிலும் ட்ரோன் காட்சி நடத்தப்பட்டது. இவை திமுக தொண்டர்களை உற்சாகமடைய செய்தது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.