திருவெறும்பூர் தொகுதியில் போலி பட்டா கொடுத்த திமுக அரசு…* சட்டசபையில் பரபரப்பை பற்ற வைத்த எம்.எல்.ஏ. நவல்பட்டு விஜி..!
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில்போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நவல்பட்டு விஜி. இவர் தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தொகுதி கோரிக்கைகள் குறித்து பேசினார். அப்போது, திருவெறும்பூர் தொகுதியில் பொதுமக்களுக்கு முந்தைய திமுக அரசு சார்பில் கொடுத்த பல பட்டாக்கள் போலியாக இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதை மனதில் வைத்து பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்ட போலி பட்டாக்களால் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் எங்கு உள்ளது என்பதே தெரியாத நிலை தான் உள்ளது. இது மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் தெரியும் என கலெக்டரையும் உள்ளே இழுத்து பரபரப்பை பற்ற வைத்தார். இவரது பேச்சால் எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்கள் கடும் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டனர். நிலைமையை உணர்ந்த சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர், த.வெ.க எம்எல்ஏவான நவல்பட்டு விஜியை சமாதானப்படுத்தியதோடு அவரது பேச்சை பாதியிலேயே முடிக்க உத்தரவிட்டார். இதுகுறித்து திருவெறும்பூர் தொகுதி திமுகவினரிடையே நாம் பேசியபோது அவர்கள் தெரிவித்ததாவது.,”கடந்த திமுக ஆட்சியில் வீடற்ற பல விளிம்பு நிலையை மக்கள் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்பதற்காக அப்போதைய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் முயற்சியால் பல மக்களுக்கு அரசின் சார்பில் பட்டாக்கள் வழங்கப்பட்டது. அதில் எந்தவிதமான முறைகேடும் நடைபெறவில்லை.இதுவரை யாரும் இதுகுறித்து புகார் அளிக்கவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, தற்போதைய எம்எல்ஏ நவல்பட்டு விஜி வேண்டுமென்றே திமுக மீது வீண் பழி சுமத்துகிறார்” என்றனர்.

Comments are closed.