தமிழக சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதனால், அரசியல் களம் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, விருப்ப மனுக்கள் பரிசீலனை போன்றவற்றில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. திமுக மற்றும் அதிமுக கட்சிகள் கூட்டணியை ஓரளவு இறுதி செய்துவிட்ட நிலையில் தமிழ்நாட்டின் பிரதான கட்சியான தேமுதிக தங்களது கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. கடலூர் மாநாட்டில், யாருடன் கூட்டணி என்று அறிவிப்பதாக தெரிவித்து இருந்தனர். ஆனால் அன்றைய தினமும் அறிவிக்கவில்லை. யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்து விட்டோம், தக்க நேரத்தில் அறிவிப்போம் என்று அந்த மாநாட்டில் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்து இருந்தார். தேமுதிகவை, அதிமுக- பாஜக கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் கோவை, ஈஷா மையத்தில் நடந்த மகாசிவராத்திரி நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி ஆகியோருடன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றார். அப்போது கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், பிரேமலதா விஜயகாந்த் கூட்டணிக்கு ஒத்துழைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் கூட்டணிக்கு ஒத்துழைக்கவில்லை. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று(19-02-2026) சென்னையில் சந்தித்து திமுக கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்தார். இதன் மூலம் வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்து செயல்படும் என்பது உறுதியாகி உள்ளது.

Comments are closed.