Rock Fort Times
Online News

கோவை மக்கள் குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு: செந்தில் பாலாஜி- அண்ணாமலை வார்த்தை போர்…!

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் தேதி இன்னும் அறிவிப்பதற்கு முன்னரே அரசியல் களம் அனல் பறக்கிறது. ஆட்சியை தக்கவைக்க திமுகவும், இழந்த ஆட்சியைப் பிடிக்க அதிமுகவும் வரிந்து கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் திமுக சார்பில் ‘ஸ்டாலின் தொடரட்டும், தமிழகம் வெல்லட்டும்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கரூரில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக எம்பி தயாநிதி மாறன், கோவை குறித்து அவதூறாக பேசியதாக வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் , “திமுக கூட்டத்தில், கோவை மக்கள், பக்கத்து ஊரைக் கெடுப்பவர்கள் என்று அவ மரியாதையாகப் பேசுகிறார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன். அதைக் கேட்டு சிரித்துக் கொண்டிருக்கிறார் முன்னாள் சாராய அமைச்சர் செந்தில் பாலாஜி. கோயம்புத்தூர் மக்கள் பண்பானவர்கள். மரியாதை மிக்கவர்கள். தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்களையும் போல, கோயம்புத்தூர் மக்களும், தங்கள் கடின உழைப்பால், தமிழகத்துக்கும், நாட்டிற்கும் தங்கள் பொருளாதார பங்களிப்பை அளித்து வருகின்றனர். திமுகவினர் தவிர மற்ற தமிழக மக்கள் யாருமே, தமிழகத்தைச் சுரண்டிக் கொழுக்க நினைப்பதில்லை. கோபாலபுர குடும்பத்தை அண்டிப் பிழைக்கும் தயாநிதி மாறனுக்கே இத்தனை ஆணவம் இருந்தால், தங்கள் கடும் உழைப்பினால் தமிழகப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் கோயம்புத்தூர் மக்களுக்கு எவ்வளவு சுயமரியாதை இருக்கும். தனது திமிர்த்தனமான பேச்சுக்கு, தயாநிதி மாறன் உடனடியாக கோயம்புத்தூர் மக்களிடம் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும். திமுகவினரின் இந்த ஆணவத்தால்தான், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதி மக்களும், திமுகவைப் புறக்கணித்து வருகிறார்கள். வருகிற சட்டமன்ற தேர்தலில், தமிழகம் முழுவதுமே திமுகவுக்கு அதே நிலைதான் ஏற்படும்” என தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜி பதிலடி,

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ள பதிவில், “நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் நகைச்சுவையாகப் பேசிய காணொளியை, வெட்டி ஒட்டிப் போட்டு அரசியல் செய்யும் அட்டக்கத்தி அண்ணாமலை, பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்து, மத்திய அரசிடம் இருந்து கோவைக்கு பெற்றுத் தந்த திட்டங்கள் என்ன? கோவை மெட்ரோ திட்டத்திற்கான நிதியை மத்திய அரசிடம் பெற்றுத் தர எடுத்த முயற்சிகள் என்ன? கோவை மாவட்ட தொழில் முனைவோர்களை வதைக்கும் ஜிஎஸ்டி பிரச்சனையில் பங்களிப்பு என்ன? இறக்குமதி வரிகளால் பாதிக்கப்பட்ட கரூர், திருப்பூர் மற்றும் கோவை ஏற்றுமதியாளர்களுக்கு துரும்பைக் கூட கிள்ளிப் போடாமல், வெறும் வாயில் வடை சுடுவதையும், வெற்று காற்றில் சாட்டை சுழற்றியதையும் கோவை மக்கள் தெரிந்து கொண்டதால் தான், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மண்ணைக் கவ்வ வைத்தார்கள்” என பதிலடி கொடுத்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்