சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய் போட்டியிட்டார். இதில் இரு தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்றார். இரு தொகுதிகளில் வெற்றி பெறுபவர்கள் ஏதாவது ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். அதன்படி, ஜோசப் விஜய் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள் முட்டி மோதி வரும் நிலையில் நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் இந்த தொகுதியில் போட்டியிட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதுதொடர்பாக தனது விளக்கத்தை நேற்று(11-06-2026) தெரிவிப்பதாக அறிவித்து இருந்தார். ஆனால், பாரதிராஜா மறைவை தொடர்ந்து இன்று தனது விளக்கத்தை அளிப்பதாக ராகவா லாரன்ஸ் அறிவித்தார். அதன்படி, இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் எனது கடமையை நேர்மையாக செய்து வந்தேன். அரசியலுக்குள் வர வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் ஒருபோதும் இருந்ததில்லை. பணம் சம்பாதிப்பது, அதிகாரம் பெறுவது அல்லது அரசியல் பதவிகளை தேடுவது போன்ற நோக்கங்கள் எதுவும் தனக்கு இதுவரை இருந்ததில்லை. தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் தன்னை நேரடியாக அரசியலை பற்றி சிந்திக்க வைத்துள்ளது. தான் அரசியலுக்கு வர வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும் என அந்த வீடியோவில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அதிகமான ரசிகர்கள் என்ன கருத்தை பதிவிடுகிறார்களோ அதைப்பொறுத்து தான் தனது அரசியல் முடிவு இருக்கும், யாருடன் கூட்டணி என்பதெல்லாம் மக்கள் வெளிப்படுத்தும் கருத்துக்களை பொறுத்துதான் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.