தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் பலருக்கும் திருப்தி தருவதாக இல்லை. திமுகவுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த கட்சி மேலிடம் குழு அமைத்துள்ள நிலையில், இன்னொரு பக்கம் திமுகவை மறைமுகமாக சாடி வருகிறது. அதேபோல் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் தவெகவுடன் கூட்டணி அமைக்கலாம் என கருத்து தெரிவித்து வருகின்றனர். 2011ம் ஆண்டு 63 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 2021ல் 25 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. இதனால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி குறித்த பேச்சுகள் எழுந்துள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பூசல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ”ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழக காங்கிரஸ் கொஞ்சம், கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது,” என கரூர் தொகுதி எம்.பி., ஜோதிமணி தெரிவித்துள்ளார். ஜோதிமணியின் இந்த பதிவு காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பதிவை கண்டு அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். கரூர் தேர்தல் படிவம், முகவர் நியமனம் உள்ளிட்டவற்றில் பிரச்சினை இருந்து வந்தது உண்மைதான். மேலிடத்தில் இருந்து இன்னும் பதில் வராத நிலையில் ஜோதிமணி பதிவிட்டது ஆச்சரியமளிக்கிறது. ஜோதிமணியின் புகார் குறித்து ஏற்கெனவே மேலிடத்திற்கு தெரியப்படுத்தி உள்ளேன் என்றார்.

Comments are closed.