திருச்சி அரசு மருத்துவமனை குடிநீர் தொட்டி மீது ஏறி நின்று தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு…! (வீடியோ இணைப்பு)
திருச்சி, புத்தூர் அருகே அமைந்துள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு திருச்சி மட்டுமின்றி அருகில் உள்ள அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் வருகை தந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். சிலர் உள் நோயாளியாகவும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண் ஒருவர் திடீரென மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள குடிநீர் தொட்டி மீது சரசரவென ஏறினார். பின்னர் அவர் அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கத்தியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் அந்த பெண்ணை கீழே இறங்கி வருமாறு கேட்டுக்கொண்டனர்.
ஆனால் அந்த பெண் கீழே இறங்கி வராமல் அங்கேயே நீண்ட நேரம் இருந்தார். இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராட்சத கிரேன் மூலம் அந்த பெண்ணை மீட்டனர். அவர் என்ன காரணத்திற்காக குடிநீர் தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார் என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக அரசு மருத்துவமனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Comments are closed.