Rock Fort Times
Online News

வெளிநாட்டு பயணம்: தமிழக அமைச்சர்கள் கீர்த்தனா, ராஜ்மோகனுக்கு மத்திய அரசு நோட்டீஸ்…!

மத்திய அரசின் உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் வெளிநாடு மேற்கொண்டதாக, அமைச்சர்கள் கீர்த்தனா மற்றும் ராஜ்மோகன் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியிருப்பது ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழகத் தொழில் துறை அமைச்சரான கீர்த்தனா மற்றும் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தித் துறைகளின் அமைச்சரான ராஜ்மோகன் ஆகிய இருவரும் சமீபத்தில் அரசு முறைப் பயணமாக வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பினர். இவர்களுடன் துறை சார்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் தனி உதவியாளர்களும் உடன் சென்று இருந்தனர். தொழில் துறை சார்ந்த முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், வேறு சில முக்கிய காரணங்களுக்காகவும் இந்த வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், தற்போது இது தமிழக அரசுக்கு மிகப்பெரிய சட்டச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக, ஒரு மாநிலத்தின் அமைச்சர்களோ அல்லது உயர் அதிகாரிகளோ அரசு முறைப் பயணமாக வெளிநாடுகளுக்குச் செல்வதாக இருந்தால், அதற்கு முறைப்படி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகங்களின் முன்அனுமதியைப் பெற வேண்டும். மேலும், இத்தகைய பயணங்களுக்குப் பிரத்யேக ‘ராஜதந்திர பாஸ்போர்ட்’ (Diplomatic Passport) மூலமாக மட்டுமே பயணிக்க வேண்டும் என்பது கட்டாய விதியாகும். ஆனால், இந்த விவகாரத்தில் இரண்டு அமைச்சர்களுமே இந்த முக்கியமான விதியைப் பின்பற்றவில்லை என்றும், மத்திய அரசின் எந்தவித முன்அனுமதியையும் பெறாமல் தங்களது சொந்த பாஸ்போர்ட்டிலேயே (Personal Passport) வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பியுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

இது இந்திய அரசின் விதிமுறைகளுக்கு எதிரானது மற்றும் அப்பட்டமான விதிமுறை மீறல் என்று சுட்டிக் காட்டப்படுகிறது. இந்த விதிமுறை மீறலைக் கடுமையான குற்றச்சாட்டாகக் கையில் எடுத்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், “மத்திய அரசின் அனுமதி இல்லாமல் மாநில அமைச்சர்கள் எவ்வாறு வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளலாம்?” என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலக அதிகாரிகள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்களது கடமையைச் சரிவரச் செய்யவில்லை என்றும், அவர்கள் அரசை முறையாக வழிநடத்தத் தவறிவிட்டனர் என்றும் மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்