திருச்சி, ஸ்ரீரங்கத்தில் போதை கும்பலால் கல்லூரி மாணவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி, ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றுப்பெருக்கை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த விராலிமலையைச் சேர்ந்த ரஞ்சித் கண்ணன் என்ற மாணவரை போதைக்கும்பல் அடித்துக் கொலை செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஆடிப்பெருக்கன்று காவிரி ஆற்றங்கரையில் கொலை நடப்பது என்பது, இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்கு சீர்கெட்டுள்ளது என்பதற்கு அத்தாட்சி. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், திருச்சி, கரூர், கோவை, சிவகங்கை, கன்னியாகுமரி என தமிழ்நாடு முழுவதும் தொடர்ச்சியாக கொலை தொடர்பான செய்திகள் வந்த வண்ணம் உள்ளது மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அளிக்கிறது. திமுக ஆட்சியில் தமிழ்நாடு கொலைக்களமாக மாறியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. வாரந்தோறும் ராசிப் பலன்கள் போடுவது போல கொலைப் பட்டியல்களை நாளிதழ்கள் பிரசுரிக்கும் அளவிற்கு சட்டம்- ஒழுங்கை அடியோடு சீர்குலைத்துள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
தினம் அரங்கேறும் கொலை சம்பவங்களால் மக்கள் எப்படி தினந்தோறும் அச்சமின்றி வேலைக்கு செல்ல முடியும்?, எப்படி நம் மாநிலத்திற்கு சுற்றுலா பயணிகள் வருவார்கள்?, எப்படி புதிய தொழில் முதலீடுகள் வரும்? “தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது நீங்கள் உங்களுக்காக செய்துகொள்ளும் விளம்பரங்கள் மூலமாக வராது.
சீரான சட்டம்-ஒழுங்கு தான் அதற்கு அடிப்படை” என்பதை உணர்ந்து, அஇஅதிமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதில் மட்டும் செலுத்தும் கவனத்தை சட்டம் ஒழுங்கைக் காப்பதற்கான நடவடிக்கைகளில் இனியாவது செலுத்துமாறு முதல்வரை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded
Comments are closed.