தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், புதிதாக களமிறங்கியுள்ள தவெக தலைவர் விஜய் பல்வேறு இடங்களில் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி இன்று (10-04-26) சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். மதுரை விமான நிலையத்தில் இருந்து காலை 10 மணியளவில் சாலை மார்க்கமாக பிரச்சார வாகனத்தில் காரைக்குடி சென்ற விஜய்க்கு ஏராளமான தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து அவர் பிரச்சார வாகனத்தில் நின்றபடி தொண்டர்களை சந்தித்து சென்றதால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்ததால் திட்டமிட்ட இடத்தில் விஜய் பேசாமல் அங்கிருந்து திருச்சிக்கு சாலை மார்க்கமாக புறப்பட்டார். இதனால் அங்கு கூடியிருந்த தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர். திருச்சி விமான நிலையத்தின் பொதுப் பகுதியில் செய்தி சேகரிக்க முயன்ற செய்தியாளர்களையும் ஊடகவியலாளர்களையும் பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர். இந்த மோதலைத் தடுக்கவும் சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வரவும் முயன்ற காவல்துறையினரையும் விஜய்யின் பாதுகாவலர்கள் கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், அங்கிருந்த விமான நிலைய அதிகாரிகளிடமே அடையாள அட்டை (ID Card) கேட்டு பாதுகாவலர்கள் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் கடும் கூச்சல், குழப்பமும், பதற்றமும் நிலவியது.

Comments are closed.