Rock Fort Times
Online News

திருச்சி அரசு பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்… அமைச்சர் ரமேஷ், மாவட்ட கலெக்டர் பிரத்திக் தாயள் உள்ளிட்டோர் பங்கேற்பு!

முன்னாள் பாரத பிரதமர் மறைந்த ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் குழந்தைகள் தின விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் நாளை சனிக்கிழமை விடுமுறை நாளில் நேருவின் பிறந்தநாள் வருவதால் அரசு பள்ளிகளில் இன்று அவரது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் நடைபெற்ற விழாவில் முதல்வர் விஜய் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கேக் வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில் திருச்சி, பாலக்கரை அரசு சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள்
மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், அரசுத்துறை அலுவலர்கள், தவெக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான நல்லாட்சியில், குழந்தைகள் தின விழாவைக் கொண்டாடும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளி மாணவ செல்வங்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கும் நிகழ்வை முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் சுமார் 2.50 லட்சம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என மொத்தம் 2,64,255 பேருக்கு சுமார் 5,28,510 கேக் பொட்டலங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மிகச் சிறந்த கல்வியை அளிப்பதோடு, மகிழ்ச்சியான கல்விச் சூழலை உருவாக்குவதிலும் முதலமைச்சர் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். கல்வியை மாணவர்களிடம் மகிழ்ச்சிகரமான ஒன்றாகக் கொண்டு செல்வதற்கான முக்கிய நடவடிக்கையாக இத்திட்டம் அமைந்துள்ளது. திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை அனைத்து பள்ளிகளிலும் சர்வே எடுக்கப்பட்டு வருகிறது. எந்தெந்த பள்ளிகளில் அடிப்படை வசதிகள் தேவை, என்னென்ன குறைபாடுகள் உள்ளது, அதனை சரிசெய்வது குறித்து திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட அளவிலான கல்வி அலுவலர்கள் அறிக்கை தயாரித்து வருகின்றனர். அறிக்கை தயாரித்தவுடன் அதற்கான பணிகள் உடனடியாக முன்னெடுக்கப்பட்டு, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் தரம் உயர்த்தப்படும். அம்பேத்கர் கல்வி உதவி திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதில் அரசு தெளிவாக உள்ளது. அதில் எங்காவது ஒரு குறைபாடு இருந்தால் அது முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சரிசெய்யப்படும் என தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்