Rock Fort Times
Online News

திருவாரூரில் கலைஞர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்…

பீகார் துணை முதல் மந்திரி பங்கேற்பு...

முன்னாள் முதலமைச்சர் மறைந்த மு.கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு தி.மு.க.மற்றும் தமிழக அரசு சார்பில் ஓராண்டு காலத்துக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதன் ஒரு பகுதியாக கருணாநிதி பிறந்த திருவாரூரில், தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் மற்றும் நூலகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் அருகே காட்டூரில் ரூ.12 கோடியில் 7,000 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழா இன்று ( 20.06.2023 ) நடைபெற்றது.

கலைஞர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது சகோதரி செல்வி செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், உடல் நல குறைவு காரணமாக அவர் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டு முத்துவேலர் நூலகத்தை திறந்து வைத்தார். கலைஞர் கோட்டத்தில் 2 திருமண மண்டபங்கள், முத்துவேலர் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது . முன்னதாக, விழாவில் பங்கேற்பதற்காக தேஜஸ்வி யாதவ் சிறப்பு விமானம் மூலம் திருச்சி வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் வந்த அவரை, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆகியோர் வரவேற்றனர். விழாவையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் 2வது நாளாக இன்றும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. திருச்சி ஐ.ஜி கார்த்திகேயன், தஞ்சை சரக டி.ஐ.ஜி.ஜெயச்சந்திரன், திருவாரூர் எஸ்.பி.சுரேஷ்குமார் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்