Rock Fort Times
Online News

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி….

தமிழக ஆயர் பேரவை தலைவர் அறிவிப்பு

மணிப்பூர் கலவரத்தை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தி, ஜூலை 2 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தப்படும் என்று தமிழக ஆயர் பேரவை தலைவர் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது –
மணிப்பூர் கலவரம் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதை வெளியிலிருந்து பார்க்கும் போது, இரு சமூகத்தினருக்கு இடையே நடைபெற்று வரும் மோதல் போன்றே தெரியும். ஆனால் உண்மையில் அங்கு குகி இனக் கிறித்தவ மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மெய்தி இன மக்கள் வாழும் பகுதிகளிலும் கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக கிறித்தவர்களுக்கு எதிராகச் செயல்பட்டு வந்த சில குழுக்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கிறித்தவ ஆலயங்களை குறி  வைத்து தாக்கி வருகின்றன. இந்த தாக்குதல் சம்பவங்களில் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், முதியவர்கள் என அனைத்து தரப்பினர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலிருந்து மீள பல ஆண்டுகளாகலாம். கிறிஸ்தவ ஆலயங்களைப்போலவே இந்து கோயில்களும் தாக்கப்பட்டுள்ளன. இத்தருனத்தில் அரசு மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும். மீண்டும் பழைய மணிப்பூர் மாநிலம் உருவாக பொருளாதார ரீதியாக எங்கள் அமைப்பு சார்பில் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம். இருப்பினும் நடந்த கலவரங்களை கண்டித்தும், அரசு தலையிட்டு உடனடியாக தீர்வு காண வலியுறுத்தியும் வரும் ஜூலை 2 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தியபடி பேரணிகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. அதே நாளில் சமூக நல்லிணக்க உறுதிமொழியும் எடுக்கப்படும் என்றார். இப்பேட்டியின் போது மதுரை பேராயர் அந்தோணிபாப்புசாமி, ஆயர்கள் அந்தோணிசாமி (பாளையங்கோட்டை), ஆரோக்கியராஜ் (திருச்சி மாவட்டம்), தமிழக துறவியர் பேரவை தலைவர் வேளாங்கண்ணி ரவி, மான்போர்ட் சகோதர்கள் சபை மாநிலதலைவர் சகோதரி இருதயம், திருச்சி மறைமாவட்ட முதன்மை குரு அந்துவான், வழக்குரைஞர் மார்ட்டின் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்