தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த சில வாரங்களில் தொடங்கவுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “அமைச்சரவைக் கூட்டத்தில் 15 புதிய முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் மூலம் ரூ.34,237 கோடி முதலீடுகளும், 55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “மாநிலத்தின் பரவலான வளர்ச்சிக்கு உதவும் வகையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த முதலீடுகள் அமைய உள்ளன. வரும் 12-ஆம் தேதி நடைபெறவுள்ள முதலீடுகள் தொடர்பான மாநாட்டில் முக்கிய அறிவிப்புகளும், தொடர்ந்து 13-ஆம் தேதி மிகப்பெரிய திட்டம் ஒன்றும் அறிவிக்கப்பட உள்ளது” என்றார். தொடர்ந்து அவர் பேசுகையில், “இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் மின்னணு உற்பத்தி நிறுவனம் மற்றும் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கான முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் மூலம் சுமார் 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். மேலும், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள நிறுவனங்களை விரிவாக்கம் செய்வதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பரவலான வளர்ச்சியின் மூலம் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிப்பதை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில், ராணிப்பேட்டையில் வரும் 9-ஆம் தேதி டாடா நிறுவனத்தின் ஜாகுவார் – லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலையை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்” என்றார்.

Comments are closed.