பெரிய தொழில் நிறுவனங்களால் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படாத வகையில், கட்டண பிரச்சனையை தீர்க்க அரசிடம் திட்டம் உள்ளதா?- நாடாளுமன்றத்தில் அருண் நேரு எம்.பி.கேள்வி…!
மழைக்கால நாடாளுமன்ற கூட்டத் தொடர் புதுடெல்லியில் நடந்து வருகிறது. இதில், பெரம்பலூர் எம்பி அருண்நேரு பேசும்போது, பெரிய தொழில் நிறுவனங்கள்
குறு, சிறு, நடுத்தர தொழில் புரிவோருக்கு தொழில் சார்ந்த பணப் பட்டுவாடா செய்வதை 45 நாட்கள் என காலக்கெடு விதித்துள்ளதால் அச்சிறிய நிறுவனங்கள் தொழில் பாதிக்கப்படுவதை அரசு அறிந்துள்ளதா? அப்படியென்றால், அச்சிறிய தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படாத வகையில், கட்டண பிரச்சனையை தீர்க்க அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் செளத்ரி பதில் அளிக்கையில், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவன சட்டப்பிரிவு 15, 2006ன் படி, பெரிய நிறுவனங்கள் தொழில் சார்ந்த கட்டணங்களை எழுத்துப்பூர்வமான உடன்படிக்கையின் படி 45நாட்களுக்குள் வழங்கப்படவேண்டும். இவ்வாறான உடன்படிக்கை ஏற்படவில்லையெனில், 15நாட்களுக்குள் கட்டணத்தை சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனத்திற்கு வழங்க வேண்டும். இந்த சட்டப்பிரிவானது 06-06-2006 முதல் அமலில் உள்ளது.
இச்சட்டப்பிரிவின் படி அமைக்கப்பட்ட குறு, சிறு நிறுவன வசதிக்கான கவுன்சில்கள் கட்டணப்பிரச்சனைகளை களைய பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கட்டணம் பெறுவோரால் இக்கவுன்சிலின் செயல்பாடு தாமதப்படுத்தப்படுகிறது. குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவன சட்டப்பிரிவுகள் 16 மற்றும் 23களில் கூடுதல் விவரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்நிறுவனங்களுக்கான கவுன்சில்கள் டெல்லி, ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட அளவில் செயல்பாட்டில் உள்ளன. குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்ந்த குறைகளை களையவும், நிலுவைத்தொகைகளை கண்காணிக்கவும் சமதான் போர்டல் ஒன்றை இத்துறை சார்ந்த அமைச்சகம் நிறுவியுள்ளது. மேலும் மத்திய அமைச்சகங்கள், அரசின் சார்பு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் பெறப்படும் கட்டணம் தொடர்பான நிலுவைகள், மாதாந்திர கட்டணப் பிரச்னைகளுக்கென சப் போர்டல் நிறுவப்பட்டுள்ளது. ஆண்டொன்றுக்கு ரூ.250 கோடி மற்றும் அதற்கு மேல் வருவாய் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் வர்த்தக வரவுகள் தள்ளுபடி அமைப்பை(ட்ரெட்ஸ்- எலெக்ட்ரானிக் சிஸ்டம்) பயன்படுத்தி பலதரப்பட்ட பைனான்சியர்கள் மூலம் வணிக தரவுகளை தள்ளுபடியாக பெறமுடியுமென மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
பெரிய இயந்திரத்திற்கான பாகங்கள், மூலப்பொருட்களை குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்து வாங்கும் பெரிய நிறுவனங்கள் அதற்குரிய தொகையை ஒப்பந்த காலக்கெடுவிற்குள் கொடுக்கத் தவறினால் பெருநிறுவன விவகாரத்துறை அமைச்சகத்திற்கு வருமானவரி கணக்கு மற்றும் தாமதத்திற்கான காரணத்தை தாக்கல் செய்ய வேண்டும். வருமானவரிச்சட்டம் 1961 உட்பிரிவு43(B)ல் புகுத்தப்பட்ட நிதிச்சட்டம் 2023 உட்பிரிவு(h)ன் படி, குறு, சிறு நிறுவனங்களுக்கு 2006 சட்டத்தின்கீழ், வரையறுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் தொகையை கொடுக்கத்தவறி தாக்கல் செய்யப்படும் கணக்கு, கொடுக்க வேண்டிய அசல்தொகை மீது தள்ளுபடியாகவே ஏற்றுக்கொள்ளப்படும். குறு, சிறு நிறுவனங்களுக்கு உரிய காலக்கெடுவிற்குள் கட்டப்படும் தொகை மட்டுமே திரட்டல் நிதி அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்படும். கடந்த வருட பட்ஜெட் தாக்கலில் கொண்டு வரப்பட்ட குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் செலுத்தப்படும் கட்டணங்கள் குறித்து அறிமுகப்படுத்தப்பட்ட இணைப்புகளை அனைத்து குறு, சிறு, நடுத்தர தொழில் சங்கங்கள் அங்கீகரித்துள்ளன. குறித்தநேரக் கட்டணம், தொழில் முடக்கம், பாதிப்பு, பொருளாதார நெருக்கடி போன்றவற்றிலிருந்து காப்பதாக உறுதியளித்துள்ளன. மேற்கண்ட நடவடிக்கைகள் யாவும் குறித்த காலக்கெடுவிற்குள் குறு,சிறு தொழில் நிறுவனங்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படவேண்டும் என்பதையே குறிக்கோளாக கொண்டுள்ளன என்று பதிலளித்துள்ளார்.
Comments are closed.