இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. அந்தவகையில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் வெளியில் எடுத்துச் செல்லக்கூடாது, அதற்கு மேல் எடுத்துச் செல்ல தேவை இருந்தால் அதற்குரிய ஆவணங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மல்லூர் பிரிவு சோதனைச் சாவடி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரஃபிக் அகமது தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சேலம் பகுதியில் இருந்து வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை இட்ட போது 39 பெட்டிகளில் தங்க நகைகள் இருந்தது தெரிய வந்தது. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.6 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், அவற்றைக் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அந்த தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து உதவி தேர்தல் அதிகாரி முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர். அந்த நகைகள், தங்க நகை கடைகளுக்கு விநியோகம் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.