பழைய 1, 2, 5, 10 பைசா நாணயங்களுக்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி- கூட்டம் கூடியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது…
அசைவ உணவுகளில் பிரியாணியை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பிரியாணி பிரியர்களுக்காகவே விதவிதமான பெயர்களில் பிரியாணி கடைகள் உருவாகி வருகின்றன. அப்படி ஒரு பிரியாணி கடை கரூர் மாவட்டம் குளித்தலையில் உதயமானது. புதிதாக பிரியாணி ஓட்டல் திறப்பவர்கள் எப்படியாவது பொதுமக்களை கவர பல்வேறு வியாபார யுக்திகளை கையாண்டு வருகிறார்கள். அந்தவகையில் குளித்தலையில் உதயமான இந்த கடையில் பழைய ஒரு பைசா, இரண்டு பைசா, ஐந்து பைசா, பத்து பைசா நாணயங்களை கொண்டு வந்து கொடுத்தால் சிக்கன் பிரியாணி தரப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.
இதனைப்பார்த்த பொதுமக்கள் பலர் தங்களது வீடுகளில் இருந்த பழைய செல்லாத காசுகளை தேடி கண்டுபிடித்தனர். சிலர் உறவினர்களிடமும், தெரிந்தவரிடமும் அந்த காசுகளை வாங்கினர். பின்னர் அவர்கள் சம்பந்தப்பட்ட பிரியாணி கடைக்கு படையெடுத்தனர். இவ்வளவு கூட்டம் வரும் என்று எதிர்பார்க்காத ஓட்டல் உரிமையாளர்கள் திணறிப் போயினர். வாகன நெருக்கடியால் அப்பகுதியில் போக்குவரத்தும் ஸ்தம்பித்தது. அதோடு, பிரியாணி வாங்க நீ, நான் என வாடிக்கையாளர்கள் போட்டி போட்டதால், அங்கு தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீஸார் அங்கு விரைந்து சென்று, கடையின் ஷட்டரை இழுத்து மூடினர். பிறகு அங்கே கூடியிருந்த அனைவரையும் பிரியாணி இல்லை எனக் கூறி கலைந்து போகுமாறு கேட்டுக் கொண்டனர். இதனால், அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதனைத்தொடர்ந்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.