தமிழக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. சென்னையில் உள்ள இவரது வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறை மற்றும் அவரது சகோதரர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இந்தநிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜி, சிகிச்சை முடிந்து சிறைக்கு சென்றால் தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா? என்ற ஒரு கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அமைச்சரவை மாற்றப்பட்டலும் செந்தில் பாலாஜியை, இலாகா இல்லாத அமைச்சராக வைத்திருக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் யோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி மதுவிலக்கு (டாஸ்மாக்) மற்றும் மின்சாரம் என்று இரண்டு முக்கிய பொறுப்புகளை வகிப்பதால், அவர் சிறையில் இருக்கும் போது அதை கூடுதல் பொறுப்பாக ஒருவர் கவனித்தே ஆக வேண்டும் என்பதால் ஏற்கனவே இருக்கும் அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பாக இந்த இலாகாக்களும் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அமைச்சர் கே.என்.நேரு அல்லது தங்கம் தென்னரசு வசம் மின்சாரத்துறை மட்டும் கூடுதல் பொறுப்பாக தரப்படலாம் என்கிறது அரசியல் வட்டாரம். அதாவது சீனியர்களில் ஏ.வ.வேலு, ஐ.பெரியசாமி, கே.என்.நேரு மின்சார துறையை கைப்பற்ற நினைக்கிறார்கள். ஆனால், மின்சாரத்தை உதயநிதி அல்லது பி.டி.ஆரிடம் கூடுதல் பொறுப்பாக கொடுக்க முதல்வர் யோசிப்பதாக தகவல். அதே சமயம் மதுவிலக்கு யார் வசம் என்ற தகவல் கிடைக்கவில்லை.

Comments are closed, but trackbacks and pingbacks are open.