கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், சின்னக்கானல் பகுதியில் உலா வந்து பலரை கொன்ற அரிக்கொம்பன் யானையினை கேரள வனத்துறையினர் பிடித்து இரண்டு மாதங்களுக்கு முன்னர் கண்ணகி கோவில் அருகே உள்ள மேட்டமலை வனப்பகுதியில் விட்டனர். அங்கிருந்து மேகமலை வந்த அந்த யானை அங்குள்ள கிராம மக்களை அச்சுறுத்தி வந்தது. பின்னர் கூடலுார் மலையடிவாரத்திற்கு சென்ற அந்த யானை அங்கிருந்து குமுளி, லோயர்கேம்ப் வழியாக தமிழ் நாட்டிலுள்ள தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்குள் புகுந்தது. அரிக்கொம்பன் யானை குடியிருப்புகளை நோக்கி வந்தால் உயிர்சேதம் ஏற்படும் என கருதிய வனத்துறையினர் அதனை காட்டிற்குள் அனுப்ப முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததால் வேறு வழியின்றி மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இன்று (05.06.2023 ) அதிகாலை அரிக்கொம்பன் யானை தேனி மாவட்டம், சின்னமனுார் அருகே மேகமலை அடிவாரத்தில் உள்ள சின்ன ஓவுலாபுரம் கிராம வனப்பகுதிக்கு வந்தது. அங்கு தயாராக இருந்த வனக்குழுவினர் மயக்க ஊசி செலுத்தி அரிக்கொம்பன் யானையை பிடித்தனர்.
பின்னர் மூன்று கும்கி யானைகள் உதவியுடன் லாரியில் ஏற்றினர். இந்த யானையை முதுமலை யானைகள் காப்பகம் அல்லது பரம்பிக்குளம், ஆழியாறு வனப்பகுதிக்குள் கொண்டு போய் விட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரிக்கொம்பன் யானை பிடிபட்டதன் மூலம் தேனி மாவட்ட மக்கள் நிம்மதி அடைந்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.