Rock Fort Times
Online News

கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு முதல் கட்டமாக 500 மதுக்கடைகளை மூட வேண்டும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது., தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மொத்தமுள்ள 5,329 மதுக்கடைகளில் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்று சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். அந்த அறிவிப்பு வந்து இன்றுடன் 53 நாட்கள் ஆகியும் 500 மதுக்கடைகளை மூடும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட வில்லை. மூடப்பட வேண்டிய மதுக்கடைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது என்ற ஒற்றை பதிலையே மீண்டும், மீண்டும் கூறி காலம் கடத்தி வருகிறது. 5 மணி நேரத்தில் தயாரிக்கப்பட வேண்டிய பட்டியலை 53 நாட்களாகியும் அரசால் தயாரிக்க முடியவில்லை என்பதை நம்ப முடியவில்லை.தமிழ்நாட்டில் மதுக்கடைகளை படிப்படியாக மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். தமிழ்நாட்டில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது; அதனால் தான் தமிழ்நாட்டில் மது வணிகமும் அதிகரித்து வருகிறது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மதுவின் தீமைகளில் இருந்து மக்களைக் காப்பது தான் அரசின் கடமை ஆகும். தமிழ்நாட்டில் மதுவிலக்கிற்கான நல்லத் தொடக்கத்தை வகுக்க முத்தமிழறிஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளை விட சிறந்த நாள் வாய்க்காது. எனவே, கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளான இன்று முதல் கட்டமாக 500 மதுக்கடைகளை மூடும் அறிவிப்பை செயல்படுத்த வேண்டும். அவை தவிர மீதமுள்ள 4,829 மதுக்கடைகளையும் படிப்படியாக மூடி, 2024-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் நாள் நூற்றாண்டு நிறைவுக்குள் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்