Rock Fort Times
Online News

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: நாளை தொண்டர்களை சந்திக்கிறார் விஜயகாந்த்…!

தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் சமீப காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இதனை உறுதி செய்யும் வகையில் அவரது மகன் விஜயபிரபாகரன் தந்தைக்கு உடல்நிலை சற்று பின்னடைவாக தான் இருக்கிறது என்று கூறினார். இது தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில் தே.மு.தி க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஒவ்வொரு வருடமும் எனது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கடைபிடித்து வருகிறேன். தே.மு.தி.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் என் வழியை பின்பற்றி அவர்களால் முடிந்த அளவிற்கு மக்களுக்கான நல உதவிகளை ‘இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே’ என்ற கொள்கை முழக்கத்தோடு தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் செய்து வருகிறார்கள். வறுமை ஒழிப்பு என்பது மக்கள் இயக்கமாக மலர வேண்டும் என்பதே எனது குறிக்கோள். “மக்களுக்காக மக்கள் பணி” என்ற திட்டத்தின் மூலம் ஏற்கனவே 2012-ம் ஆண்டில் செய்ததைப்போல தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக நல உதவிகளை ஏழை, எளிய மக்களுக்கு வழங்கி உள்ளோம். மேலும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு ஆண்டுதோறும் வழங்குவது போல், மதிய உணவு மற்றும் நிதியுதவியாக 50 ஆயிரம் ரூபாய் இந்த ஆண்டும் வழங்கப்படும். இதுபோன்று நமது கழக கொடியை அனைத்து இடங்களிலும் ஏற்றி நலத்திட்டங்களை கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் ஏழை, எளிய மக்களுக்கு இந்த வறுமை ஒழிப்புதினத்தில் செய்ய வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். என் மீது அன்புகொண்ட தமிழக மக்களுக்கும், தாய்மார்களுக்கும், தே.மு.தி.க. நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் என்றென்றும் நான் கடமைப்பட்டுள்ளேன். அதேநேரத்தில் தமிழக மக்கள் தங்கள் நல் ஆதரவையும், ஒத்துழைப்பையும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தொடர்ந்து வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய உடல்நலம் குறித்த வதந்திகளை யாரும் நம்பவேண்டாம். நான் நலமுடன் இருக்கிறேன். கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் எனது பிறந்தநாளில் 25.8.2023 (நாளை) காலை 10 மணிக்கு கழக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் நேரில் சந்திக்கவுள்ளேன். என்னை சந்திக்க வரும் கழக தொண்டர்கள் யாரும் பூங்கொத்து, சால்வை, மாலை போன்ற அன்பளிப்புகளை தவிர்க்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்