காவிரி, மேகதாது பிரச்சனைகள் குறித்து விவாதிக்க உடனே அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்…* எடப்பாடி பழனிசாமி..!
தமிழக விவசாயிகளின் ஜீவ நதியாம் காவிரி நதி மற்றும்
மேகதாது பிரச்சனைகள் பற்றி விவாதிக்க, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்துகிறேன்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நீரை மாநிலங்களுக்கிடையே பங்கிடுவது பற்றி உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி, கர்நாடக அரசு இந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழகத்திற்கு தரவேண்டிய 9.19 டிஎம்சி தண்ணீருக்கு பதில் 2.91 டிஎம்சி நீரை மட்டுமே திறந்துள்ளது. ஜூலை மாதம் வழங்கப்பட வேண்டிய தண்ணீர் 31.24 டிஎம்சி நீர். ஆனால், கர்நாடக அரசு தமிழகத்துக்கு திறக்க வேண்டிய பங்கு நீரையும் இன்றுவரை முழுமையாகத் திறந்து விடவில்லை.
காவிரி நீர் ஒழுங்குமுறை குழு கூட்டத்தில் இதுகுறித்து முறையிடப்பட்டது. அதன்படி, காவிரியிலிருந்து தமிழகத்துக்கு ஜூலை 29 முதல் 15 நாட்களுக்கு தினமும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு விநாடிக்கு 3500 கன அடி வீதம் கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீரை திறந்துவிட வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையமும் கர்நாடக காங்கிரஸ் அரசை அறிவுறுத்தியுள்ளது.
ஆனால், கர்நாடக முதல்வர் காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த மறுக்கிறார். தமிழக முதல்வர் பேச்சுவார்த்தைக்கு பெங்களூரு வரும்பொழுது அவரை ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று கர்நாடக அணைகளைப் பார்வையிட வைப்பேன் என்றும் கூறியுள்ளார்.
இதுபோன்ற நிலையில், மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டினால் தமிழகத்துக்கு காவிரியிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர்கூட கிடைக்காது. குடிநீருக்காக காவிரியை நம்பியுள்ள சுமார் 20 மாவட்டங்களில் கடும் குடிநீர் பிரச்சனை ஏற்படுவதுடன், டெல்டா மாவட்டங்களும் பாலைவனமாக மாறும் சூழ்நிலை ஏற்படும். தவெக-காங்கிரஸ் கூட்டணி அரசின் முதல்வர் பேச்சுவார்த்தைக்காக பெங்களூரு செல்வதாகச் செய்திகள் வெளிவந்தவுடன், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளின் ஆலோசனையைப் பெறவேண்டும் என்றும், அதன் அடிப்படையில் சட்ட வல்லுநர்களின் ஆலோசனையைப் பெற்றும் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
பொய்க்கால் குதிரை அரசின் முதல்வரை வலியுறுத்தி ஏற்கெனவே நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தெளிவாக உள்ளதால், பேச்சுவார்த்தைக்காக தமிழக முதல்வர் பெங்களூரு செல்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழக விவசாயிகளின் ஜீவ நதியாம் காவிரி நதி மற்றும் மேக தாது பிரச்சினைகள் பற்றி விவாதிக்க, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.