அமெரிக்காவில் மத்திய மேற்கு பகுதிகளை தாக்கிய ஆற்றல் மிக்க பனிப்புயலால் 5 மாகாணங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. பனிப்புயல் எதிரொலியாக பலத்த காற்றுடன் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. குறிப்பாக மிச்சிகன், இலினாய், நியூ மெக்சிகோ, உள்ளிட்ட 5 பகுதிகள் பனிப்புயலால் பெரும் பாதிப்படைந்துள்ளன. கடும் பனிப்பொழிவை அடுத்து நூற்றுக்கணக்கான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. சாலைகளில் உறைபனி படர்ந்துள்ளதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகள், கட்டிடங்கள், மரங்கள், என அனைத்தும் பணியாள் சூழ்ந்துள்ளது. மணிக்கு 97 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த குளிர் காற்று வீசுவதால் மக்கள், வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். மேலும் நியூ இங்கிலாந்து பகுதியில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது.குறிப்பாக மினியா போலீஸ் நகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு, சுமார் 20 அங்குலம் அளவிற்க்கு உறைபனி கொட்டியுள்ளது. இதனையடுத்து மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள மினியாபொலிஸ், செயின்பால் ஆகிய நகரங்களில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சாலைகளில் எச்சரிக்கையாக பயணிக்குமாறும் மாகாண அரசுகள் வாகன ஓட்டிகளை எச்சரித்துள்ளன. விமான நிலைய ஓடுபாதைகளிலும் பனி படர்ந்துள்ளதால் 5 மாகாணங்களில் 3,500 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமானங்களின் புறப்படும் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. பனிப்புயல் காரணமாக பல நகரங்களில் மின்கம்பிகள் சாய்ந்துள்ளதால் தற்காலிகமாக மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே அடுத்த சில நாட்களுக்கு வடக்கு சமவெளி பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் குளிரை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்க வானிலை மையம் எச்சரித்துள்ளது.