ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரும் உண்மை குற்றவாளிகள் தான்- சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு காவல்துறை விளக்கம்…!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு அருகே கடந்த 5ம் தேதி இரவு 7.30 மணி அளவில் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், இந்த கொலை தொடர்பாக கடந்த வருடம் படுகொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், திமுக வழக்கறிஞர் அருள், கோகுல், விஜய், சிவசக்தி ஆகிய 11 நபர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மேலும், இது தொடர்பான 2 சிசிடிவி காட்சிகள் சம்பவம் நடந்த தினத்தன்று வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியது. ஆனால், இதில் கைது செய்யப்பட்ட 11 பேரும் உண்மையான குற்றவாளிகள் அல்ல என ஆம்ஸ்ட்ராங்கின் உறவினர்கள், நண்பர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், திமுக-வின் கூட்டணி கட்சி தலைவர்கள் என பல தரப்பினரும் தங்களின் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இதற்கிடையே இக்கொலையில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்பவர் இன்று(14-07-2024) காவல்துறையால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டார். இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள்தான் என்பதை உறுதிபடுத்தும் நோக்கில், இதுதொடர்பான சிசிடிவி காட்சியை சென்னை காவல்துறையினர் இன்று வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளனர்.
Comments are closed.