திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மருங்காபுரி கல்லுப்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. மருங்காபுரி வடக்கு ஒன்றிய அதிமுக இளைஞரணி செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர் அலோபதி மருத்துவம் படிக்காமல் தனது வீட்டில் தினமும் நோயாளிகளுக்கு, காய்ச்சல், தலைவலி, எலும்பு சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனது வீட்டில் சேரில் அமர்ந்துள்ள வெள்ளைச்சாமி, முதியவர் ஒருவரிடம் நோய் தன்மையை கேட்டறிந்து சர்வசாதாரணமாக கால் முட்டியில் ஒரு ஊசி, இடுப்பில் இரண்டு ஊசி என மூன்று ஊசி போடும் காட்சிகளும், அதனையடுத்து ஒரு சிறுவனுக்கு இடுப்பில் இரண்டு ஊசிகள் போட்டு ஒரு துண்டுச்சீட்டில் மாத்திரைகள் எழுதிக் கொடுக்கும் காட்சிகள் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.முறையாக மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு ஊசி போட்டும், மருந்து மாத்திரைகள் எழுதிக் கொடுத்தும் மக்களின் உயிரோடு விளையாடும் இவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.ஆனால், இந்த வீடியோ குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என தெரிவித்த அவர்கள் இதுகுறித்து முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இந்த சம்பவம் மணப்பாறை, மருங்காபுரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.