பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 6 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளியூர்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் மற்றும் வெளியூர்களில் தங்கி படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். இதனால், திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் பயணிகளின் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. ஆகவே, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பயணிகள் வசதிக்காகவும் திருச்சியில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு நள்ளிரவு முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இதன்படி, திருச்சியிலிருந்து மதுரை, புதுக்கோட்டை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மன்னார்புரம் மதுரை அணுகுசாலை அருகிலும், சோனா-மீனா திரையரங்கம் அருகிலும், கல்லுக்குழி பழைய வட்டார போக்குவரத்து அலுவலகச்சாலை அருகிலும் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக, மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மன்னார்புரம் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு இணைப்பு நகரப் பேருந்துகளை இயக்கவும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்காலிக பேருந்து நிலையங்களில் பொதுமக்களுக்கு இன்னல் ஏற்படாவண்ணம் காவல்துறையின் மூலம் தகுந்த பாதுகாப்பும், மாநகராட்சி மூலம் நிழற்குடை, குடிநீர், பொது கழிப்பிட வசதி மற்றும் ஒலிபெருக்கி மூலம் தகவல்களை தெரிவித்தல் போன்ற ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளன.
Comments are closed.