9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடந்து வருகின்றன. லீக் மற்றும் சூப்பர் 8 போட்டிகள் முடிவடைந்து தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. இந்தியா, ஆப்கானிஸ்தான், தென்னாபிரிக்கா, இங்கிலாந்து ஆகிய 4 அணிகள் அரை இறுதியை எட்டின.
இதன் முதலாவது அரை இறுதி போட்டியில் ஆப்கானிஸ்தானும், தென்னாப்பிரிக்காவும் சந்தித்தன. அரையிறுதிப்போட்டியில் அனைவரின் எதிர்பார்ப்பும் ஆஃப்கானிஸ்தான் மீதுதான் இருந்தது. அவர்கள் அந்தளவுக்கு சிறப்பாக ஊக்கமளிக்கும் வகையில் ஆடி அரையிறுதிக்கு முன்னேறியிருந்தனர். தென்னாப்பிரிக்கா வலுவான அணியாக இருந்தாலும் ஆஃப்கானிஸ்தான் எப்படியாவது போராடி இறுதிப்போட்டிக்கு முன்னேற முயற்சி செய்யும் என்கிற நம்பிக்கையும் இருந்தது. ஆனால், ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. தென்னாப்பிரிக்க அணி மிகச்சிறப்பாக ஆடி ஆஃப்கானிஸ்தானின் பேட்டிங் லைன் அப்பை சீர்குலைத்து முதல் முறையாக உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதித்திருக்கிறது. ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷீத்கான் தான் டாஸை வென்றிருந்தார். முதலில் பேட் செய்து டார்கெட்டை டிஃபண்ட் செய்வதுதான் அவர்களின் பலம். அதற்கேற்றாற் போலவே ரஷீத் கானும் முதலில் பேட்டிங் செய்யப்போவதாக அறிவித்தார். ஆனால், ஆஃப்கானிஸ்தானின் பேட்டிங் அத்தனை சிறப்பாக அமையவில்லை. வெறும் 56 ரன்களுக்கு அந்த அணி ஆல் அவுட் ஆனது. அதனைத் தொடர்ந்து ஆடிய தென்னாபிரிக்க அணி 1 விக்கட்டை மட்டுமே இழந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது.இதன்மூலம் முதல் முறையாக தென் ஆப்பிரிக்கா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்ததன் மூலம் ஆப்கானிஸ்தானின் இறுதி போட்டி கனவு கலைந்தது.

Comments are closed.